Saturday, August 16, 2008

இந்தியாவெங்கும் அமைதியாக நடந்தது விடுதலைநாள் விழா

இந்தியாவின் 62-ஆவது விடுதலைநாள் விழா மிகச் சிறப்பாக,மிக அமைதியாக நடந்தது.எங்கேயும் ஒரு வன்முறைச் செயல் கூட நடக்கவில்லை.மேலும் சமயநல்லிணக்கமும் நாட்டுப்பற்றும் அனைத்து மக்களிடமும் நன்கு வெளிப்பட்டது.
சம்மு-காசுமீரில் இந்துக்களும் முசுலிம்களும் கைகோத்து ஆடிப்பாடி மிக மகிழ்ச்சியாக விடுதலைநாளைக் கொண்டாடினர்.
குசராத்தில் நரேந்திரமோடி முசுலிம்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்கள் இல்லத்தில் தேநீர் அருந்திச் சமயநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது குறிப்பிடத்தக்க சிறப்பான செய்தியாகும்.
எல்லா மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் கட்சிவேறுபாட்டை ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒற்றுமையாக விழாக் கொண்டாடியது இந்த ஆண்டு
விடுதலைநாள் விழாவுக்கே உரிய தனிச் சிறப்பாகும்.
இந்தியா மிகச் சரியான பாதையில் நடைபோடும் இச் சூழல் அனைத்துநாடுகளிலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

Friday, August 15, 2008

விலைவாசிகள் சரிவு

விலைவாசிகள் மடமட எனச் சரிந்துவிட்டன.அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கே கிடைக்கிறது.பருப்புவகைகள் கிலோ மூன்று ரூபாய்க்கும்
எண்ணெய் வகைகள் கிலோ பத்து ரூபாய்க்கும் கிடைக்கின்றன.
பணவீக்கம் 14% என்றிருந்த நிலை ஒரே நாளில் மாறிய விந்தையை
நமது நிதியமைச்சர் சிதம்பரம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரசு கூட்டணி எதுவும் வைத்துக்கொள்ளாமலேயே
பாராளுமன்றத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிடும்.
பாரதிய சனதா கட்சிக்கு ஒரே கலக்கமாக உள்ளது.
ஏனைய கட்சிகள் எல்லாம் இந்தத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை.
இந்தியா எங்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர்.

Wednesday, August 13, 2008

சேது சமுத்திரத்திட்டம்-உடனே நிறைவேற்று

அத்வானி முழக்கம்
சேதுசமுத்திரத்திட்டத்தை உடனே நிறைவேற்றுமாறு பா.ச.க.தலைவர் அத்வானி மைய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.இராமர் பாலம் பற்றித் தாங்கள் கொண்டிருந்த தவறான அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.”உலகமே இராமர் உலகம்;அண்டசராசரங்களும் இராமர் படைப்பு.இராமர் இல்லாத இடமே இல்லை.இதனை மறந்துவிட்டு ஒரு சிறிய மணல்திட்டு மட்டுமே இராமருக்கு உரியது என்பதனைப் போலத் தாங்கள் கூறிவந்தது வருந்தத் தக்கது” என்றார்,அவர்.சேது சமுத்திரத்திட்டத்திற்கு இராமர் சமுத்திரத்திட்டம் என்று கூடப் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்னும் கலைஞர் கருணாநிதியின்
பெருந்தன்மையைப் பாராட்டிய அவர்,இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அங்ஙனம்பெயர்வைத்தால் ஏனையசமுத்திரங்கள்இராமருக்குத் தொடர்பற்றவை என்னும் தவறான கருத்து ஏற்பட்டுவிடும் என அவர் கூறினார்.
சேதுசமுத்திரத் திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது பா.ச.க. ஆட்சியே என்னும் உண்மையைத் தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கலப்படமில்லாத் தூய பொய்

எங்கள் தினப்புளுகு இதழில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் 100% பொய்யே என்பதை அறிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.
இச்செய்திகளில் 0.0001%-ஆவது உண்மை உள்ளது என யாராவது மெய்ப்பிக்கமுடியுமெனில் இதழ் நடத்துவதையே நாங்கள் விட்டுவிட ஆயத்தமாக உள்ளோம்.

நடராசன் கொடியேற்றுவார்

பெருந்தன்மை மிக்க முதல்வர் கலைஞர் கோட்டையில் கொடியேற்றும் பொறுப்பைத் துணைமுதல்வர் திரு ம.நடராசனுக்கு வழங்கியுள்ளார்.
எனவே 15/8/08 அன்று திரு.ம.நடராசன் அவர்களே கோட்டையில் கொடியேற்றுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் துணைமுதல்வர் கோட்டையில் கொடியேற்றுவது இதுவே வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமரசத் திட்டம்

கடைசிநேரச் சமரச முயற்சியாக ஒரு திட்டத்தைச் செல்வி செயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் வழங்கியுள்ளனர்.சசிகலாவின் துணைவரும் மூத்த பத்திரிகையாளருமாகிய ம.நடராசன் பெயரைத் துணைமுதல்வர் பதவிக்கு முன்மொழிந்துள்ளனர்.
14/8/08 அன்று திரு.ம.நடராசன் பதவிப்பொறுப்பு ஏற்பார் என ஆளுநர் வட்டாரம் அறிவித்துள்ளது

முதலமைச்சர் யார்?

மிகுந்த பெருந்தன்மையுடன் எவ்வித நிபந்தனையுமின்றித் தமது கட்சியைத் தி.மு.க.வுடன் இணைத்துள்ளதால் செல்வி செயலலிதாவே முதல்வர் பொறுப்பு ஏற்கவேண்டும் எனக் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைஞரின் இந்த வேண்டுகோளை அவரது சார்பில் மு.க.அழகிரியும் மு.க.ச்டாலினும் போயசு தோட்டத்திற்குச் சென்று கூறியுள்ளனர்.
எனினும், இயக்கத்தின் மூத்த தலைவரும் இன்றைய தேசியத் தலைவர்களில் ஒருவருமாகிய கலைஞர் இருக்கும் போது, அரசியலில் அவரைவிட இளையநிலையில் உள்ள தாம் பொறுப்பேற்பது எவ்வகையிலும் பொருந்தாது எனத் திட்டவட்டமாகச் செல்வி செயலலிதா கூறிவிட்ட்தாகத் தெரிகிறது.